பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை – சாலை அமைக்கும் பணி தொடக்கம்..!
பாம்புக்கடித்து பச்சிளம் குழந்தை உயிரிழந்ததையடுத்து, சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே உயிரிழந்துள்ளது.
இதனை தொடர்ந்து, உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்றுள்ளனர்.
பச்சிளம் குழந்தை உயிரிழப்பையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். வனத்துறையிடம் அனுமதி பெற்று மலை கிராமத்தில் சுமார் 6கிமீ சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மலை கிராமங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்போம்.
அல்லேரி மலைப்பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சாலையை அளவிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.