வீட்டுமனைப் பட்டா ஒரே நாளில் ரத்து – திமுக அரசிற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!
பத்திரிகையாளர்களின் வீட்டுமனைப் பட்டாவினை ஒரே நாளில் ரத்து செய்துள்ள தி.மு.க. அரசிற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்.
இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர்களுக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து முடிவெடுக்க ஆணையம் அமைக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் நலன் காக்கப்படும் என்ற வாக்குறுதியும், மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை போன்ற முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதியும் தி.மு.க.வால் அளிக்கப்பட்டு இருந்தது.
பத்திரிகையாளர்களின் நலன் காக்கப்படும் என்று சொல்லிவிட்டு, அவர்களின் நலனை கெடுக்கின்ற பணியை தி.மு.க. அரசு மேற்கொண்டிருப்பது “படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்” என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் நிருபர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், சூர்யா கரில் 86 பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும், மொத்தமுள்ள 86 பேரில், 46 பேர் மூன்று சென்ட் நிலத்திற்கு 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பட்டா பெற்றுவிட்டதாகவும், இதன்மூலம் அரசுக்கு 2.50 கோடி ரூபாய் செலுத்தியுள்ளதாகவும், மீதியுள்ளவர்கள் பணம் செலுத்தி பட்டா பெற தயாராக உள்ளதாகவும், பணம் செலுத்தியவர்களில் பெரும்பாலானோர் வட்டிக்கு கடன் பெற்று பணம் செலுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 50 கிமீ சுற்றளவில் பத்திரிகையாளர்கள் அவர்களது குடும்பத்தினர் பெயரில் எவ்வித சொத்துகளும் வைத்திருக்கக்கூடாது என்ற உத்தரவு உள்ளிட்ட பல நிபந்தனைகள் வீட்டுமனை உத்தரவில் குறிப்பிட்டுள்ளதால், இதனை தளர்த்தக் கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், பிற பகுதிகளில் இதுபேன்ற நிபந்தனை இல்லை எனவும் பத்திரிகையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றனர்.
பத்திரிகையாளர் சங்கங்களின் கோரிக்கை பரிசீலனையில் உள்ள நிலையில், வீட்டுமனைப் பட்டா பெற்றவர்களில் யாரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இல்லை என்றும், அவர்களுக்கு ஏற்கெனவே வீடு, நிலம் உள்ளது என்றும் தெரிவித்து, 38 பேரின் பட்டாக்களை முன்தேதியிட்டு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பணி மாறுதலில் செல்வதற்கு முன்னர் ரத்து செய்துவிட்டதாக பத்திரிகையாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இது பத்திரிகையாளர் நலனுக்கு எதிரானது மட்டுமல்லாமல், இயற்கை நியதிக்கும் முரணானது. ஓர் அரசு கொள்கை முடிவெடுத்து வீட்டுமனைப் பட்டா வழங்கிய நிலையில், அரசாணை இல்லாமல் மாவட்ட ஆட்சித் தலைவர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுப்பது என்பது ஏற்புடையதல்ல. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களிடையே மனஉளச்சலை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் நலனுக்கு எதிரான தி.மு.க. அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, மதுரை, மாவட்ட ஆட்சித் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட பட்டா ரத்து ஆணையை உடனடியாக திரும்பப் பெறவும், பத்திரிகையாளர் சங்கங்களின் வேண்டுகோளினை ஏற்று நிபந்தனைகளை தளர்த்தவும் உரிய நடவடிக்கை டுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.