புதிய நாடாளுமன்ற கட்டடப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார் பிரதமர் மோடி..!
புதிய நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து கெளரவித்தார்.
புதுடெல்லியில் சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதல்கட்டமாக, பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின், திறப்பு விழாவுக்கான பூஜையை பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து பாரம்பரிய பூஜைகள் மற்றும் அனைத்து மத குருமார்கள் வழிபாடும் நடைபெற்றது. இதன்பின், பிரதமர் மோடி ஆதீனங்கள் வழங்கிய செங்கோல் முன் மரியாதை நிமித்தமாக விழுந்து வணங்கினார். இதைத்தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி செங்கோலை எடுத்து சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் நிறுவினார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவிற்கு முன்னதாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டிடம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் பணியாற்றிய தொழிலாளர்களை பாராட்டினார். கட்டுமான தொழிலாளர்களுக்கு பாரம்பரிய சால்வை அணிவித்து, நினைவு பரிசுகளை பிரதமர் மோடி வழங்கினார். இந்த விழாவில் மக்களவை சபாநாயகர் மத்திய அமைச்சர்கள் ராஜா சிங் அமித்ஷா ஜெய்சங்கர் பாஜக தலைவர் கலந்து கொண்டனர்.