கர்நாடகாவில் இன்று 24 பேர் அமைச்சராக பதவியேற்பு..!
கர்நாடக அமைச்சரவையில் 24 புதிய அமைச்சர்கள், இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்.
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை ர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் கடந்த 20-ம் தேதி பதவியேற்றனர்.
இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட யு.டி. காதர், கடந்த 24-ம் தேதி சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று, கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்ற பிறகு முதன்முறையாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், கர்நாடக அமைச்சரவையில் 24 புதிய அமைச்சர்கள், இன்று பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.