10 பந்தாவது எடுத்துக்கோ, கவாஸ்கர் கூறிய அறிவுரை… ஆனால் சாம்சன் சொன்னது வேற; போட்டுடைத்த ஸ்ரீசாந்த்.!
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் சாம்சன் பார்ம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிபோட்டியோடு முடிவடைகிறது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் ராஜஸ்தான் அணி நன்றாக விளையாடினாலும், அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் கடந்த வருட ரன்னர்அப் அணியான ராஜஸ்தான் இம்முறை பிளேஆப் சுற்றுக்கு முன்னேற் முடியாமல் வெளியேறியது.
ஐபிஎல் தொடரின் முதல் ஆறு போட்டிகளில் நான்கில் வென்று வலிமையான அணியாக தொடங்கிய போதிலும், ராஜஸ்தான் அணியின் பேட்டிங் சொதப்பியதால் அடுத்த 5 போட்டிகளில் 4 இல் தோல்வியுற்றது. முக்கியமாக கேப்டன் சஞ்சு சாம்சன், தொடரின் முதல் 2 போட்டிகளில் 55 மற்றும் 42 ரன்கள் குவித்திருந்த நிலையில், அடுத்தடுத்து 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி பார்மில் சற்று தடுமாறினார்.
ஐபிஎல் இறுதியில் 14 போட்டிகளில் விளையாடிய சாம்சன் 362 ரன்களுடன் சீசனை முடித்தார். இவரது பேட்டிங் குறித்து அவ்வப்போது பலதரப்பட்ட விமர்சனங்கள் நிலவி வந்தாலும், தொடர்ந்து சாம்சனுக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட்டர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். அதேபோல் இம்முறை ஐபிஎல்லிலும் சாம்சன் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்ததாக பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியில் சாம்சன் போன்ற திறமையான வீரர்களை சேர்க்கவேண்டும் எனவும், அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என ரவிசாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், சாம்சன் குறித்த சுவாரசியமான நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து ஸ்ரீசாந்த் கூறும்போது, நானும் சாம்சனும் கேரள அணிக்காக 4 முதல் 5 வருடங்கள் ஒன்றாக விளையாடியுள்ளோம். நான் அவரிடம் எப்போதும் கூறுவது இது தான், ஐபிஎல்-ஐ விட முதல் தர கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்.
ரிஷப் பந்த் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சாம்சனை விட ஒரு படி மேலே தான் இருக்கின்றனர், ரிஷாப் தற்போது அணியில் இல்லையென்றாலும் விரைவில் அவர் வந்துவிடுவார். ஆனால் சஞ்சு சாம்சன், கதையில் அவர் இந்த ஐபிஎல்-இல் இரண்டு மூன்று முறை வந்தவுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஐபிஎல் தொடரின் போதும் சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர், அறிவுரை கூறியுள்ளார். அதாவது, குறைந்தது 10 பந்துகளாவது களத்தில் நின்று விளையாடு, பந்துகளை கவனி, உனது திறமை இங்கு எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். முதல் 12 பந்துகளில் ரன்கள் ஏதும் நீ அடிக்கவில்லையென்றாலும், உன்னால் 25 பந்துகளில் 50 ரன்கள் குவிக்க முடியும் என்று கவாஸ்கர், சாம்சனிடம் கூறினார்.
ஆனால் சாம்சன் அதற்கு, இல்லை இதுதான் எனது பேட்டிங் ஸ்டைல், என்னால் இப்படி தான் விளையாட முடியும், பொறுமையாக விளையாடுவது என்னால் முடியாத ஒன்று என்று கூறியுள்ளார். இதனை ஸ்ரீசாந்த் பிரபல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தெரிவித்துள்ளார். மேலும் நானும் சாம்சனிடம் உனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள், உனது ஆட்ட வியூகத்தையும் மாற்று என்று அறிவுரை கூறியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.