முடிவெடுக்க 8, 9 மாதங்கள் உள்ளன.. அதற்குள் ஏன் தலைவலி – ஓய்வு குறித்து தோனி ஓபன்!
எப்போதும் சி.எஸ்.கே. அணியோடுதான் இருப்பேன் என சென்னை கேப்டன் தோனி உறுதி.
நடப்பாண்டு 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதன்பின், களமிறங்கிய குஜராத் அணி, சென்னையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், முதல் முறையாக குஜராத் அணியை வீழ்த்தி, 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று, முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதுவும் 10-ஆவது முறையாக இறுதி போட்டிக்கு செல்லும் முதல் அணி என்ற சாதனையை சென்னை படைத்துள்ளது. இப்போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் எம்.எஸ்.தோனி தனது ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
எம்.எஸ். தோனி கூறுகையில், ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு விளையாடுவேனா? என்பது குறித்து முடிவெடுக்க, 8, 9 மாதங்கள் அவகாசம் உள்ளது. டிசம்பரில் ஐபிஎல் ஏலம் வரவுள்ளது. ஏன் இப்போதே அதைப்பற்றி யோசித்து, தலைவலி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறன் என்றார்.
மேலும், விளையாடுவதாக இருந்தாலும் சரி, அல்லது களத்திற்கு வெளியே ஏதேனும் பொறுப்பாக இருந்தாலும் சரி, எப்போதும் சென்னை அணியோடு இருப்பேன். இந்தாண்டு ஐபிஎல் தொடரில், சென்னை விளையாடும் போட்டி அனைத்திலும், தோனியிடம் தொடர்ந்து ஓய்வு குறித்து கேள்வி வைக்கப்பட்ட வருகிறது. இதற்கு, தோனியும் பல்வேறு விதமாக பதில்களை தெரிவித்து வருகிறார்.
அவரது பதிலில், அடுத்த ஆண்டும் விளையாடுவேன் என்றும் மறைமுகமாக கூறி வருகிறார். சென்னை நிர்வாகமும் இதனை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் ஓய்வு குறித்து தோனி கூறுகையில், ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு விளையாடுவேனா? என்பது குறித்து முடிவு செய்ய கால அவகாசம் உள்ளது, எப்போதும் சி.எஸ்.கே. அணியோடுதான் இருப்பேன் என உறுதி அளித்துள்ளார்.