நெல்லை விளையாட்டு மைதான விபத்து – மாநகராட்சி ஆணையர் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்..!
விளையாட்டு மைதானத்தின் கட்டமைப்பை மேற்கொண்ட கட்டுமான நிறுவனத்திற்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நோட்டீஸ்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட வ.உ.சி விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்தில மாநகராட்சி ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்த பின் மாநகராட்சி ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நெல்லை விளையாட்டு மைதானத்தில் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேற்கூரையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், மற்ற மேற்கூரைகளும் ஆய்வு செய்யப்படும். விரிவான விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், விளையாட்டு மைதானத்தின் கட்டமைப்பை மேற்கொண்ட கட்டுமான நிறுவனத்திற்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் 7 நாட்களுக்குள் முதன்மை அறிக்கை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.