நடிகர் சங்க தலைவராகும் சிவன்!மகிழ்சியில் ரசிகர்கள்
நடிகர் மோகன்லால் மலையாள நடிகர் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வுசெய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அம்மா’ என்ற பெயரில் கேரளாவில் மலையாள நடிகர், நடிகைகள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக மலையாள குணச்சித்திர, நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் தற்போது பதவி வகித்து வருகிறார். இவர் சாலக்குடி தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார்.
கடந்த 17 வருடங்களாக மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இன்னசென்ட் இருந்து வருகிறார். இவர் பதவி ஏற்ற பிறகு நடிகர், நடிகைகளின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்க நடவடிக்கையும் எடுத்தார். நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் இன்னசென்ட் திறமையாக கையாண்டு நடிகர் சங்கத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் இன்னசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து உள்ளார். ஆனாலும் முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் நடிகர் சங்க தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்ப வில்லை.
இதனால் விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்க தலைவர் தேர்தலில் தான் போட்டியிட விரும்ப வில்லை என்று இன்னசென்ட் அறிவித்துள்ளார்.
இதனால் மலையாள நடிகர் சங்கத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் மோகன்லால், மம்முட்டி ஆகியோரில் ஒருவர் புதிய நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்ற பேச்சும் மலையாள படஉலகில் எழுந்தது. இந்த நிலையில் மலையாள நடிகர்சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மோகன்லால் மனு செய்து உள்ளார். இதுவரை அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்ய வில்லை.
இதைதொடர்ந்து விரைவில் கேரள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நடிகர் மோகன் லால் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். மோகன்லால் நடிகர் சங்க தலைவராவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.