#IPL BREAKING: பெங்களூர் முயற்சி தோல்வி…சுப்மன் கில் மிரட்டல்..! குஜராத் அணி அபார வெற்றி..!
ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs GT போட்டியில், குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
ஐபிஎல் 2023 தொடரின் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் இன்றுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைகின்றன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 101* ரன்களும், டு பிளெசிஸ் 28 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும், அனுஜ் ராவத் 23* ரன்களும் குவித்தனர். குஜராத் அணியில் நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து, 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், சுப்மன் கில் மற்றும் விஜய் சங்கர் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஒருபுறம் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, மறுபுறம் விஜய் சங்கர் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் தசுன் மற்றும் டேவிட் மில்லர்(6 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தனர். ஆனால், சுப்மன் கில் தனது அட்டகாசமான பேட்டிங்கால் சதமடித்து வெற்றி இலக்கை எட்டினார்.
முடிவில், குஜராத் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 104* ரன்களும், விஜய் சங்கர் 53 ரன்களும் குவித்தனர். பெங்களூரு அணியில் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது.