தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த ஊழியர்களை மிரட்டி வாக்குமூலம்!பரபரப்பு தகவலை வெளியிட்ட அன்புமணி

Default Image

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்,தூத்துக்குடி படுகொலையை நியாயப்படுத்த அரசு ஊழியர்களை மிரட்டி வாக்குமூலம் வாங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட  அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக வரலாற்றில் இது வரை இல்லாத வகையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொது மக்கள் 13 பேரை சுட்டுக் கொன்ற தமிழகக் காவல்துறை, அதை நியாயப்படுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களை கட்டாயப்படுத்தி போலி வாக்குமூலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. காவல் துறையின் இந்த சட்டவிரோத செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை பணிக்கு வந்த பணியாளர்களின் மேசைகளில் காவல்துறை சார்பில் ஒரு படிவம் வைக்கப்பட்டிருந்தது. அதில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய பேரணியின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்ன நடந்தது? போராட்டக்காரர்களால் ஆட்சியர் அலுவலகப் பணியாளர்களுக்கு எத்தகைய காயங்கள் ஏற்பட்டன.

பொதுச்சொத்துக்கள் எந்தெந்த வகையில் சேதப்படுத்தப்பட்டன என்பன உள்ளிட்ட விவரங்களை ஒவ்வொரு பணியாளரும் அவர்களின் பெயர், முகவரி, பதவி உள்ளிட்ட விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்தாக செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கோரப்பட்டிருந்த விவரங்களை காவல்துறையினர் விரும்பும் வகையில் நிரப்பித் தரும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிகாரிகளின் அனுமதியின்றி இத்தகைய விவரங்கள் கோரப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை ஊழியர்கள், உடனடியாக தங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி, படிவத்தை நிரப்பித் தருவதில்லை என்று தீர்மானித்தனர் அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் படிவத்தை நிரப்பித்தர மறுத்து விட்டனர்.

 

 

தூத்துக்குடியில் அப்பாவி பொது மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. அதனால் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக போலியான ஆதாரங்களை ஏற்படுத்தும் முயற்சியில் காவல் துறையும், தமிழக அரசும் ஈடுபட்டுள்ளன.

அதன் ஒரு கட்டமாகவே ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தாக்கப்பட்டதாக அவர்களிடமிருந்தே பொய்யான வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி மிரட்டி வாங்க காவல்துறை துடிக்கிறது. அதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உடன்படாததால் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு உள்ளூர் காவல்துறை நிலையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. எங்கிருந்தோ தமிழக ஆட்சியாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான் உள்ளூர் காவல்துறை மூலம் செயல்படுத்தப்பட்டது. அந்த துப்பாக்கிச்சூட்டுக்கு துணை வட்டாட்சியர்கள் தான் ஆணையிட்டதாக ஒரு நாடகத்தை தமிழக அரசு அரங்கேற்றியது.

ஆனால், சம்பவ இடத்திலேயே இல்லாத துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டதாக போலியான ஆவணங்கள் தயாரித்து, அதுவும் அம்பலமானது. அதனால் வேறு வழியின்றி இப்படி நாடகத்தை அரங்கேற்ற அரசு முயல்கிறது. செய்த குற்றத்தை மறைக்க அரசே போலி ஆவணங்களை தயாரிப்பது அருவருக்கத்தக்கது.

சட்டப் பேரவையில் பேசுவதே விசாரணையை பாதிக்கும் எனும் போது, விசாரணையுடன் சம்பந்தமில்லாத உள்ளூர் காவல் துறை ஆட்சியர் அலுவலக ஊழியர்களை மிரட்டி வாக்குமூலம் பெறுவது விசாரணையை பாதிக்காதா? என்பதை முதல்- அமைச்சர் விளக்க வேண்டும். இதன் பின்னணியிலுள்ள சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நடை பெற்றுவரும் நிகழ்வுகள் அனைத்துமே, இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதைத் தான் உறுதி செய்கின்றன. எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதி விசாரணைக்கு பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்த வேண்டும். அதேபோல், இதுகுறித்த குற்ற வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்