#Group4: ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.! தமிழ்நாடு அரசிடம் சீமான் கோரிக்கை…
குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
அரசுத் துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆண்டொன்றுக்கு, வெறும் 10000 பணியிடங்கள் மட்டுமே குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பும் திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வந்தால் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அதிகாரத்தை அடைந்த பிறகு அதனை நிறைவேற்ற மறுப்பது வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய இளைஞர்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
அதிமுக அரசு 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சராசரியாக 10000 பணியிடங்கள் என்ற அளவில் பணியிடங்களை நிரப்பி வந்தது. அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எவ்வித அரசுத்தேர்வும் நடைபெறவில்லை.
ஆகவே, பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3.5 இலட்சம் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தேர்வுக்கு முயற்சிக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30000 பணி யிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்த அரசாணை வெளியிட வேண்டுமெனவும், அரசுப்பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன் என்று சீமான் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் #Group4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!https://t.co/PwzHeE3KuQ@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/eDg2gGFX2k
— சீமான் (@SeemanOfficial) May 21, 2023