நிக்கோலஸ் பூரன் அதிரடி பேட்டிங்..! லக்னோ அணி 176 ரன்கள் குவிப்பு..!

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs LSG போட்டியில், முதலில் பேட் செய்த லக்னோ அணி 176/8 ரன்கள் குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, லக்னோ அணியில் முதலில் கரண் சர்மா, குயின்டன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் கரண் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய பிரேரக் மன்கட், குயின்டனுடன் இணைந்து அணிக்கு ரன்களை குவித்தனர்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் இருவரும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்தடுத்து களமிறங்கிய லக்னோ வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டை இழந்தனர். அதன்பின் நிக்கோலஸ் பூரன் அதிரடி காட்ட சிக்ஸர்களை பறக்க விட்டு அரைசதம் கடந்தார்.
அவருடன் இணைந்து விளையாடிய ஆயுஷ் படோனி 25 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இதன்பின், நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்க, கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் நவீன் களத்தில் நின்றனர். முடிவில், லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 58 ரன்களும், குயின்டன் 28 ரன்களும், பிரேரக் மன்கட் 26 ரன்களும், ஆயுஷ் படோனி 25 ரன்களும் குவித்துள்ளனர். கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.