நடப்பு ஐபிஎல் சீசனில் 5 டக் அவுட்..! தன்னைத்தானே ட்ரோல் செய்த ஜோஸ் பட்லர்..!
ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லர் தன்னைத்தானே ட்ரோல் செய்துள்ளார்.
16வது ஐபிஎல் சீசன் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிளேஆஃப் சுற்றிற்குச் செல்ல ஒவ்வொரு அணியும் நம்பிக்கையோடு போராடி வருகிறது. அதன்படி, நேற்று தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
இதில் பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் நான்கு பந்துகளில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் ஐந்து டக் அவுட்களை பதிவு செய்தார்.
இதனையடுத்து, தான் பதிவுசெய்த ஐந்து டக் அவுட்களை வைத்து ‘டக் பான்கேக்’ எனத் தன்னைத்தானே ட்ரோல் செய்துள்ளார். கேப்டன் சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஜோஸ் பட்லருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் மூவரும் வெளியே சில தண்ணீர் பாட்டில்களுடன் அமர்ந்து அரட்டையடிப்பதைக் காணலாம்.
அந்த புகைப்படத்திற்கு சாம்சன், “இன்னும் சிறிது நேரம் காத்திருப்போம்., ஒருவேளை பிரியாணி கிடைக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு ஜோஸ் பட்லர், “பிரியாணி வேண்டாம். டக் பான்கேக்” என்று பதிலளித்துள்ளார். அவரது இந்த பதிவிற்கு வாத்து வறுவல் மற்றும் வாத்து பிரியாணி சிறந்தது என ரசிகர்கள் கேலியாக பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram