2000 ரூபாய் நோட்டுக்கு முடிந்தது கதை…! ஆரம்பம் முதல் இறுதி வரை ஓர் அலசல்..!
மத்திய ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம், இந்தியாவில் அதிக மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30க்கு பிறகு செல்லாது என மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. இன்னும் சில மாதங்களில் செல்லாத நோட்டுகளாக மாறப்போகும் 2000 ரூபாய் நோட்டுகள் பிறந்து, வளர்ந்த கதையை இங்கே சிறு கட்டுரையில் காணலம்….
பொதுமக்கள் மே மாதம் 23-ஆம் தேதியிலிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் எதற்காக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதோ அந்த திட்டம் முழுமையாக பலன் அளித்திருக்கிறதா.? என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை:
நாட்டில் “ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் பிடியை” முறியடிப்பதாகக் கூறி, இந்தியாவை பணமில்லாப் பொருளாதாரம் எனும் நடவடிக்கையின் மூலம் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்காக, கடந்த 2016 ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன்படி நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்றும், இனி அவை செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் RBI சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
சிரமத்துக்குள்ளான மக்கள்:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்த பிறகு, பணமில்லாப் பொருளாதாரத்தை நோக்கி மக்களை பயணிக்குமாறு அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் வலியுறுத்தினார், அதாவது டெபிட் கார்டுகள் மற்றும் டிஜிட்டல் வாலட்கள் போன்ற பணப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தத் தொடங்குமாறு கூறினார்.
இதையடுத்து நாட்டில் மக்கள் தங்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும் வங்கிகளுக்கு மாறி மாறி அலைந்தனர், மற்றும் மக்கள் தங்களின் தேவைக்கு பணத்தினை எடுப்பதற்கும், மணிக்கணக்காக நாள் கணக்காக வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களிலும் வேலைகளை விட்டுவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவமும் அரங்கேறியது.
இந்தியா முன்னேற நடவடிக்கை:
ஏழை எளிய நடுத்தர மக்கள் முதல் நாட்டில் இருந்த அனைவரும் சிரமங்களுக்கு உள்ளான நிலையில், இது குறித்து அப்போது கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லீ, கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்த சமுதாய இயல்புநிலை உடைந்து, சீராக்கப்பட்டு வருகிறது.
இந்தியா முன்னேற இது போன்ற நடவடிக்கை தேவை, மேலும் இந்தியா புதிய இயல்புநிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என கூறினார்.
எதிர்ப்பு – கருப்பு தினம்:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முதல் ஆண்டு நிறைவையொட்டி நாட்டில் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களை நடத்தி, நவம்பர் 8-ஆம் தேதியை “கருப்பு தினமாக” அறிவித்தன.
மெழுகுவர்த்தி அணிவகுப்பு, தெருக்களில் நாடகம், அணிவகுப்பு வரை, கொல்கத்தா, அகமதாபாத், வதோதரா, புனே மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
கையெழுத்து இயக்கம்:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கறுப்புப் பணப் பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டதாகக் கூறி பாஜக சார்பிலும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது, இதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தரும் பொதுமக்களை தங்களது கையெழுத்துகளை பதிவு செய்யும்படி கேட்கப்பட்டது.
நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதாகப் பலரும் வரவேற்றனர். இருப்பினும், அடுத்த சில மாதங்களுக்கு மக்கள் அதிகப்படியான சிரமங்களை எதிர்கொண்டனர். பணமதிப்பிழப்பு குறித்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.
2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்:
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்த நிலையில், திடீரென 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வெகுவாக குறைந்தது. இதனால் 2000 ரூபாய் நோட்டுகள் பற்றிய கேள்வி எழுந்தது. அப்போது தான் மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் கூறுகையில், அரசு 2000 ரூபாய் அச்சிடும் பணியை நிறுத்திவிட்டதாக குறிப்பிட்டார். மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடிப்பதை 2019 ஆண்டே நிறுத்தி விட்டதாக மாநிலங்களவையில் தெரிவித்தார். இந்த 2000 ரூபாய் நோட்டானது, 2016-17 நிதியாண்டில் 354.2991 கோடி மதிப்பில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன.
அதன் பிறகு, 2017-18 நிதியாண்டில் முந்தைய ஆண்டை விட குறைக்கப்பட்டு, 11.1507 கோடி நோட்டுகள் மட்டுமே ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டன. அதற்கடுத்த படியாக 2018-2019 நிதியாண்டில் இன்னும் குறைக்கப்பட்டு, 4.669 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டு மக்கள் மத்தியில் புழக்கத்தில் விடப்பட்டன. 2017 மார்ச் 31 வரை காலகட்டத்தில், அப்போதைய நிதி அறிக்கையின்படி, இந்தியாவின் பொருளாதாரத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு 50.2 சதவிகிதமாக இருந்தது.
நோட்டுகளின் புழக்கம் குறைவு:
2018 மார்ச் 30 வரை காலகட்டத்தில், 336 கோடி எண்ணிக்கையில் ரூ.2000 நோட்டுகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தன. அடுத்து, 2019ஆம் ஆண்டு, 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வெகுவாகக் குறைந்தது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 274 கோடி எண்ணிக்கையில் மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அடுத்து , 2021 பிப்ரவரி 26 நிலவரப்படி 249 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தன.
2022 ஆம் ஆண்டு மார்ச் 31 இல் 2,000 ரூபாய் நோட்டுகள் சதவிகிதம் 13.8ஆக சரிந்தது. ரூ. 31.05 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இதனை அடுத்து தான், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் ரிசர்வ் பேங்க் அறிவித்த தகவலின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ரூ.2000 நோட்டுகள் வாபஸ்:
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது, அதில் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவித்தது. பொதுமக்கள் மே மாதம் 23-ஆம் தேதியிலிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த முடிவிற்கு எதிர்க்கட்சி விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
க்ளீன் நோட் பாலிசி:
இந்திய ரிசர்வ் வங்கியின் “க்ளீன் நோட் பாலிசியின்” படி, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கதாக இருக்கும். பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள கொள்கை தான் இந்த கிளீன் நோட் பாலிசி.
தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதால், அது திரும்பப்பெறப் போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற/டெபாசிட் செய்வதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ருபாய் நோட்டுகளை செப்டம்பர் 30க்குள் வங்கிகளில் செலுத்துமாறும், வங்கிகள், 2000 நோட்டுகளை பொதுமக்களிடம் விநியோகிக்காமல் இருக்கவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மற்றபடி, 2000 ரூபாய் நோட்டுகளானது வழக்கமான புழக்கத்திற்கு செப்டம்பர் 30வரையில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.