பஞ்சாப் அணி அசத்தல் பேட்டிங்..! ராஜஸ்தான் வெற்றி பெற வலுவான இலக்கு..!
ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs RR போட்டியில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 187/5 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து பொறுப்பாக விளையாடிய ஷிகர் தவான், அதர்வ தைடே ஜோடி ரன்கள் குவித்த நிலையில், தங்களது விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின், சாம் கர்ரன் மற்றும் ஜிதேஷ் சர்மா இணைந்து அணிக்கு ரன்களை குவிக்க, அதிரடியாக விளையாடிய சர்மா 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஷாரு கானுடன் இணைந்து சாம் கர்ரன் சிறப்பாக விளையாடி தனது அரைசதத்தை பதிவு செய்யும் நேரத்தில் இன்னிங்ஸ் முடிந்தது.
முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக சாம் கர்ரன் 49* ரன்களும், ஜிதேஷ் சர்மா 44 ரன்களும், ஷாரு கான் 41* ரன்களும் குவித்துள்ளனர். ராஜஸ்தான் அணியில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.