மசூதியில் இந்து கடவுள்கள்.? ஞானவாபி வழக்கில் இன்று விளக்கம் அளிக்கும் இஸ்லாமிய அமைப்பு.!
உத்திர பிரதேச, வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில், இஸ்லாமிய கமிட்டியினர் இன்று நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளனர்.
உத்திரபிரதேசத்தில் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதிக்குள் இந்து கடவுள்களின் சிலைகள் உள்ளன எனவும், ஆதலால், பக்தர்களை உள்ளே வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டுமென வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் ஐந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர்.
நிராகரித்த நீதிமன்றம் :
இதனை அடுத்து மசூதிக்குள் வீடியோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு இந்து கடவுள் வடிவில் ஓர் பொருள் இருப்பதாக வீடியோ மூலம் கண்டறியப்பட்டது. அது இந்து கடவுள் தான் என இந்து அமைப்புகள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. மேலும், தொல்லியல் துறை ஆய்வுக்கு அதனை உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது.
உயர்நீதிமன்றம் உத்தரவு :
இந்த நிராகரிப்பை தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றமானது, இந்திய தொல்லியல் துறையினர் ஞானவாபி மசூதிக்குள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, மேலும், இது தொடர்பான விசாரணையை வாரணாசி மாவட்டம் நீதிமன்றமே ஏற்று நடத்த வேண்டும் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் ஏற்பு :
அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, ஞானவாபி மசூதி முழுவதும் தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என இந்துக்கள் தரப்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கியது.
மசூதி தரப்பு விளக்கம் :
இந்து அமைப்பினர் தாக்கல் செய்த மனு தொடர்பான வாதங்களுக்கு, மே-19-க்குள் (இன்று) ஞானவாவை மசூதி கமிட்டியினர் தங்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அந்த விளக்கம் தொடர்பான விசாரணை வரும் மே 22ஆம் தேதி நடைபெறும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், இன்று ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.