‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கான தடை நீக்கம் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்குவங்க மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டதை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
கடந்த 5ம் தேதி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி ‘தி கேரளா ஸ்டோரி ‘ திரைப்படம் வசூலில் பல கோடிகளை அள்ளி வருகிறது. இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்தவகையில், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஒரு சில மாநிலங்கள் வரிவிலக்கை அறிவித்திருந்தன. அதேநேரம் மேற்கு வங்கம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்கள் இந்தப் படத்திற்கு தடையும் விதித்திருந்தது. இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்குவங்க அரசு தடை விதித்ததற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சிலர் ஒரு விஷயத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக அதனை தடை செய்வீர்களா? என்றும் பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம், அதை விடுத்தது அடிப்படை உரிமையை எப்படி பறிக்க முடியும் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது அந்தந்த மாநில காவல்துறையின் கடமை. படம் பார்க்க செல்வோருக்கு தேவைப்பட்டால் பாதுகாப்பு வழங்கவும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட தடை விதித்து மேற்கு வங்க அரசு மே 8-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடை செய்யக்கூடாது எனவும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் தொடக்கத்தில் இந்தப் படம் திரையிடப்பட்ட போதிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட நிறுத்துவதாகத் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் கடந்த மே 7ம் தேதி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.