சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து..! 3 பேர் கைது..!
மேற்கு வங்க பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 3 பேர் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத பட்டாசு ஆலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பட்டாசு ஆலை இயங்கி வந்த கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மீட்பு பணியை துவங்கினர். மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடி விபத்திற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, மாநில அரசின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது. அதன்பின், சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மூன்று பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கிருஷ்ணபாதா பாக் அல்லது பானு பாக், அவரது மகன் மற்றும் மருமகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது பானு பாக் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேலும், இந்த தொழிற்சாலை சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகவும், அதன் உரிமையாளர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.