கர்நாடக காங்கிரஸ் கட்சியில் பிரிவு ?எம்.எல்.ஏ.க்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பு..!
கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள குமாரசாமி மந்திரிசபை கடந்த 6-ந்தேதி விஸ்தரிக்கப்பட்டது. அதில், மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்த முன்னாள் மந்திரியும், லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக அங்கீகரிக்க குரல் கொடுத்தவருமான எம்.பி.பட்டீலுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. அவருக்கு ஆதரவாக 15 முதல் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அவர்கள் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான கிருஷ்ண பைரே கவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தீர்வு காணும் பணி நடந்து வருவதாக கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்தார்.
எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், “ராகுல் காந்தியிடம் எனது கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன். காங்கிரசை விட்டு விலக மாட்டேன். பா.ஜனதாவுடன் நான் தொடர்பில் இல்லை” என்றார்.