டெல்லி ஜாமியா மசூதி தலைமை இமாமுடன் விஜய் சந்திப்பு..!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.
இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.
அவ்வகையில், மத்திய விளையாட்டுத்துறை முன்னாள் மந்திரி விஜய் கோயல் இன்று டெல்லி ஜாமியா மசூதியின் தலைமை இமாம் மவுலானா சையது முஹம்மது புஹாரியை இன்று சந்தித்து ஆதரவு திரட்டினார். மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் புத்தகத்தை தலைமை இமாமிடம் அளித்த அவர் இதுதொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி ஜாமியா மசூதி தலைமை இமாம் மவுலானா சையது முஹம்மது புஹாரி, ‘நாடு முழுவதும் முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வெளியான நிலையில் அவர்கள் (பா.ஜ.க.வினர்) இப்போது நம்மிடம் வந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் இப்போதாவது இந்த அரசு ஏதாவது செய்தால், அது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக அமையும்’ என்று குறிப்பிட்டார்