கேரளாவில் மருத்துவர்களை பாதுகாக்க அவசர சட்டம்! 7 ஆண்டுகள் சிறை.. 5 லட்சம் அபராதம்!

Kerala doctors

மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் பணிபுரியும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.

கேரளாவில் மருத்துவர்களை பாதுகாக்க அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது அம்மாநில அரசு. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்தை நிறைவேற்றியது கேரள அரசு. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்கா மருத்துவமனையில் நோயாளி ஒருவரால், வந்தனா தாஸ் என்ற பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களை பாதுகாக்கும் நோக்கத்தில், கேரள அரசு தற்போது அவசர சட்டத்தை நிறைவேற்றி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கேரள சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சொத்து சேதம் தடுப்பு) திருத்தச் சட்டத்தின் கீழ், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டால், அவர்களுக்கு ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

ஒரு லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, சுகாதாரப் பணியாளர்கள் அல்லது சுகாதார நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு எதிராக வன்முறைச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு 6 மாதங்களுக்குக் குறையாத மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் ரூ.50,000 முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த சட்டம் கூறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்