“கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்” – சித்தராமையா பேட்டி
காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன் என சித்தராமையா பேட்டி.
கர்நாடகா முதல்வர் யார் என்று தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோருடன் இன்று அடுத்தடுத்து தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. இதில், ராகுல் காந்தியை டெல்லியில் சித்தராமையா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக ராகுல் காந்தி உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக முதல்வர் தேர்வில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன் என தெரிவித்தார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வருகிறது. இதனால், கர்நாடக தேர்தல் முடிவு வெளியாகி சில நாட்கள் கடந்த நிலையிலும், இன்னும் முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்க உள்ளதாகவும், துணை முதல்வராக டிகே சிவகுமார் நாளை பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.