நடவடிக்கை எடுக்க தவறினால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த பாஜக தயங்காது – அண்ணாமலை எச்சரிக்கை
அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவரே மரக்காணம் துயர சம்பவத்திற்கு காரணம் என அண்ணாமலை அறிக்கை.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவது அரசின் கைது நடவடிக்கைகளால் அம்பலமாகியுள்ளது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மரக்காணம் அருகே கள்ளச் சாராயத்திற்கு 19 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில்,, கள்ளச் சாராயத்திற்குப் பலியானவர்களை, அவர்கள் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாமல் காவல்துறையே அடக்கம் செய்த அவலமும் நிகழ்ந்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே, தமிழகம் முழுவதும் 1558 கள்ளச் சாராய வியாபாரிகளைக் கைது செய்து, பல ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயத்தைப் பறிமுதல் செய்திருக்கிறது தமிழக காவல் துறை. இத்தனை கள்ளச் சாராய வியாபாரிகள் விவரங்கள் தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்காமல் இத்தனை நாட்கள் அனுமதித்து விட்டு, தற்போது கண்துடைப்புக்காக கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது வெட்கக்கேடு, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறது தமிழக அரசு? என்றுள்ளார்.
கள்ளச்சாராயம் விற்பனை அனைத்து காவல்துறைக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரியாமல் இத்தனையும் நடந்திருக்குமா?, அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவரே மரக்காணம் துயர சம்பவத்திற்கு காரணம். குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் செயல்படுவதாக குற்றசாட்டியுள்ளார்.
மேலும், ஆட்சியாளர்களின் மெத்தனத்தால் உயிரிழப்பு. இந்த துயர சம்பவத்திற்குத் தொடர்பு உள்ள திமுக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும், தாய்மார்களின் கண்ணீரையும் வெறும் இழப்பீடு கொடுத்து சரி செய்து விடலாம் என்று முதலமைச்சர் நினைத்தால், அது மிகவும் தவறான போக்காகும். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவும் பாஜக தயங்காது என்று எச்சரிக்கிறேன் என்றுள்ளார்.
ஆட்சியாளர்களின் மெத்தனத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு.
இந்த துயர சம்பவத்திற்குத் தொடர்பு உள்ள திமுக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
அறிக்கை: https://t.co/Es0RyNrjLp
— K.Annamalai (@annamalai_k) May 16, 2023