பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதி!மாவோயிஸ்டுகள் திட்டத்தால் உஷாரான சிறப்பு பாதுகாப்பு படை!
பிரதமர் நரேந்திர மோடிக்கு, மாவோயிஸ்டுகள் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதன் எதிரொலியாக, திட்டமிடாமல் திடீரென பொதுமக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நேற்று தகவல் வெளியானது. பிரதமர் மோடியின் சாலை வழி பிரச்சார பயணங்களை பயன்படுத்தி, ராஜீவ்காந்தி கொலை போல மற்றொரு சம்பவத்தை அரங்கேற்றுவது என மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளதாக, அந்த அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்பித்த புனே போலீசார், மத்திய உள்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த கடிதம் குறித்து மத்திய உள்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், எஸ்பிஜி ((SPG)) எனப்படும் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்பு படையினரும், சிபிஜி ((CPG)) எனப்படும் பிரதமருக்கு மிகநெருக்கமாக இருந்து பாதுகாப்பு வழங்கும் அணியினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல, பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்பு படையில் சிஏடி ((CAT)) எனப்படும் பதில் தாக்குதல் அணியும் உண்டு. அதி நவீன ஆயுதங்களையும், மிகக்கடுமையான பயிற்சிகளையும் பெற்ற இந்த அணியினர் அவசர சூழலில் கண்ணிமைக்கும் நேரத்தில் விரைந்து செயல்படும் திறன்பெற்றவர்கள். இந்த சிஏடி அணியினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து திட்டமிடாமல் திடீரென பொதுமக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு சிறப்பு பாதுகாப்பு படையினர் பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். கடந்த ஜனவரியில் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்புக்குப் பிறகு மோடி திடீரென கூடியிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்து மகிழ்ந்தார்.
இதுபோல முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென பொதுமக்கள் மத்தியில் செல்வது, ரோட்ஷோ எனப்படும் சாலையோரம் கூடியுள்ள மக்கள் மத்தியில் முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென செல்வது போன்றவற்றை தவிர்க்குமாறு சிறப்பு பாதுகாப்பு படையினர் பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். பிரதமரின் வாகன அணிவகுப்பில் செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களின் ஓட்டுநர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.