நிதி பரிவர்த்தனை வழக்கு டெல்லி பத்திரிகையாளர் உபேந்திரா ராய்க்கு ஜாமீன்..!
டெல்லியின் பிரபல பத்திரிகையாளர் உபேந்திரா ராய் என்பவரை சுமார் 79 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத நிதி பரிவர்த்தனை நடத்தியது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து விமான நிலைய அனுமதி அடையாள அட்டை பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 3-ம் தேதி கைது செய்தனர்.
இவ்விவகாரத்தில் லக்னோ, நொய்டா, டெல்லி, மும்பை உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏர் ஒன் ஏவியேஷன் நிறுவன உரிமையாளர் பிரசுன் ராய் என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உபேந்திர ராயிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்த நிலையில் அவரை நீதிமன்ற காவலில் அடைத்தனர். இதற்கிடையில், நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உபேந்திரா ராய் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் பணமோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், உபேந்திர ராய் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். தன்னை காவலில் வைத்திருப்பதற்கு இனி அவசியம் இல்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதனை விசாரித்த சிறப்பு சி.பி.ஐ நீதிபதி சந்தோஷ் உபேந்திர ராய்க்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஜாமின் தொகையாக 5 லட்சம் வழங்க வேண்டும் மற்றும் இரண்டு பேர் ஜாமின் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமின் அவருக்கு வழங்கினார்.