தமிழகத்தை அழிக்க மத்திய அரசின் புது திட்டம் ..!
டெல்லியில் நடைபெற்று வரும் கவர்னர்கள் மாநாட்டில் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து ஃபைல் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் நடைபெறப்போகும் பல்வேறு அதிரடித் திருப்பங்களின் சாராம்சங்கள் அந்த ஃபைலில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஜெயலிலதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் மிகப்பெரிய அளவில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. குறிப்பாக மத்திய அரசுக்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் திட்டங்களான ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களும் அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதுதவிர, நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டங்களும் தமிழக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தின.
அதேபோல், காவிரி விவகாரத்தை மையமாகவைத்து நடைபெற்ற போராட்டங்களில் விவசாயிகளைத் தாண்டிப் பல்வேறு இளைஞர்களும் போராட்டக்களத்தில் கலந்துகொண்டனர். மேலும், பிரதமரின் தமிழக வருகையின்போதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் மத்திய அரசு்ககு எதிராகத் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. வந்துகொண்டிருக்கின்றன. அதன் இறுதியாகத்தான் ஸ்டெர்லைட் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்து 13 உயிர்களைப் பறித்தது. அதேபோல் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களும் மத்திய அரசைக் கவலைகொள்ளச் செய்தன. இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் மத்திய அரசுக்கு எதிரான கோபம் மிகப்பெரிய அளவில் வெளியாகியுள்ளதை மத்திய உளவுத்துறையினர் தொடர்ந்து கண்காணித்துவந்தனர்.
மத்திய அரசுக்கு எதிரான பிரசாரம், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது என்பதை உளவுத்துறையினர் மூலம் மத்திய உள்துறை அறிந்துவந்தது. தமிழக அரசு மத்திய அரசுக்கு ஆதரவான போக்கில் செயல்படுகிறது என்ற கருத்தும் தமிழகம் முழுவதும் உருவானதால், இந்தியக் கூட்டாட்சி என்பதே தமிழக நலனுக்கு எதிராகவே செயல்படுகிறது என்ற எண்ண ஒட்டம் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் தமிழ் அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுகிறது.
அதற்குக் காரணம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் முதல் ஸ்டெர்லைட் போராட்டம் வரை ஒவ்வொரு போராட்டத்தின் வீரியத்துக்குப் பின்னாலும் சத்தமில்லாமல் சில அமைப்புகள் வேலை செய்துள்ளன என்று உளவுத்துறை ஆதாரத்தோடு சொல்லியுள்ளது. வெறும் மக்கள் சக்தி மட்டுமே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்றும் அதன் பின்னணியில் அமைப்புரீதியாகச் செயல்படும் ஆட்கள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற போராட்டங்களை வலிமைப்படுத்த முடியும் என்றும் அரசு கருதி்யது.
குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டத்துக்குக் காரணம் சமூக விரோதிகள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. இதற்குக் காரணமே, அந்தப் போராட்டத்தை இவ்வளவு வீரியமாகக் கொண்டுசென்றதில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட சில அமைப்புகளின் வழிகாட்டுதல்தான் என்கிறார்கள். இதே நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து தனிநாடு கோஷம் அதிகரித்துவிடும் என்ற நிலை வந்துவிடும் என்று மத்திய, மாநில அரசுகள் கருதுகின்றன.
சமீபத்தில் தமிழகம் வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து இரண்டு பக்க அறிக்கை ஒன்றைத் தயார் செய்து மத்திய அரசிடம் அளித்துள்ளார். அதேபோல், ஆளுநர் பன்வாரி லாலை இரண்டு தினங்களுக்கு முன் அவசரமாகச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ”தமிழகத்தில் தமிழ் இன அமைப்புகளும் சில இஸ்லாமிய அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை வைத்தார். அதே கருத்தை கவர்னர் தரப்பும் பதிலாகச் சொல்லியுள்ளது. இதையெல்லாம் ஃபைலாகத் தயார் செய்து டெல்லிக்குப் பறந்துள்ளார் கவர்னர்.
உளவுத்துறையினர் கண்காணிப்பு வட்டத்துக்குள் முக்கியத் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் கொண்டுவரப்பட்டுவிட்டனர். மத்திய அரசின் அதிகாரபூர்வ உத்தரவு வந்தவுடன் சட்டரீதியான நடவடிக்கை பாய உள்ளது. முதலில் அமைப்புகளுக்குத் தடை… அடுத்து, அந்த அமைப்புகளின் தலைவர்கள் மீது பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சி இனி போராட்டக்களத்தையே அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாமல் செய்வது. இந்த அதிரடி நடவடிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டது. இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு எட்டிவிட்டதால், அவர்களும் அரசை எதிர்கொள்ள தயார் நிலையிலே இருக்கிறார்கள் என்கிறார்கள், விவரமறிந்தவர்கள்.