அடுத்த முதலமைச்சர் யார்? காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் டி.கே. சிவகுமார் சந்திப்பு!
பெங்களுருவில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார் டி.கே. சிவகுமார்.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் மாநில தலைவர் டி.கே. சிவகுமார் சந்தித்துள்ளார். பெங்களுருவில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார் டி.கே. சிவகுமார். கர்நாடகவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்பது குறித்த விவாதங்கள் நீடித்து வந்தன. கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சமயத்தில், காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே, பிறந்தநாள் பரிசாக முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா எனும் எதிர் பார்ப்பு நீடித்து வருகிறது.
இதனால், கடந்த 2022ம் ஆண்டு முதல் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த டி.கே.சிவக்குமார் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களுருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் மாநில தலைவர் டி.கே. சிவகுமார் சந்தித்து பேசியுள்ளார்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், முதல்வர் யார் என்ற முடிவை தலைமையிடம் விட்டுவிட்டோம், அவர்கள் முடிவெடுப்பார்கள். டெல்லி செல்வதற்கு இன்னும் முடிவு எடுக்கவில்லை. முதலமைச்சர் பதவி குறித்து, மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்பேன் என்றார். இதனிடையே, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இன்று மதியம் 1 மணிக்கு தனிவிமானம் மூலம் டெல்லி செல்கிறார்.