MIvsGT: சுழற்றி அடித்த சூர்யகுமார் யாதவ்..! குஜராத் அணிக்கு இமாலய இலக்கு..!
ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs GT போட்டியில், முதலில் பேட் செய்த மும்பை அணி 218/5 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, மும்பை அணியில் களமிறங்கிய இஷான் கிஷன் (31 ரன்கள்), ரோஹித் சர்மா (29 ரன்கள்) களமிறங்கி பொறுப்பாக விளையாடி சில பவுண்டரிகள் அடித்து நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ரஷித் கான் வீசிய பந்தில் இருவரும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில் அவருடன் இணைந்து விளையாடிய விஷ்ணு வினோத், ஓரளவு ரன்கள் எடுத்து தங்களது விக்கெட்டை இழந்தார். பின்னர் சூர்யகுமார், நேஹால் வதேரா அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதி ஓவரில் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் சதமடித்து இன்னிங்ஸை முடித்துவைத்தார். முடிவில், மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது.
மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 103* ரன்களும், இஷான் கிஷன் 31 ரன்களும், விஷ்ணு வினோத் 30 ரன்களும், ரோஹித் சர்மா 29 ரன்களும் குவித்துள்ளனர். குஜராத் அணியில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் குஜராத் அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.