கர்நாடகாவில் ஆட்சியமைக்க போவது பாஜகவா? காங்கிரேசா? – நாளை வாக்கு எண்ணிக்கை!
224 தொகுதிகள் நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 73.19% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 1957-இல் மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டதில் இருந்து நடந்த தேர்தலில் இதுவே அதிகமாகும்.
இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக 224, காங்கிரஸ் 223, மதசார்பற்ற ஜனதா தளம் 207, பகுஜன் சமாஜ் கட்சி 193 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்த தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த தகுதியானவர்களாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 224 தொகுதிகள் நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. மே 10-ஆம் தேதி நடைபெற்ற வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள், 75,603 மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நாளை முடிவு அறிவிக்கப்பட உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் 2,615 வேட்பாளர்கள் காலத்தில் உள்ளனர். தொங்கு சட்டப்பேரவையா? இல்லை பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போவது காங்கிரேசா? பாஜகவா? என்பது நாளை வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும். எனவே, கர்நாடக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.