#Delhiriotscase: டெல்லி கலவர வழக்கில் 9 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு!

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் 9 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வகுப்புக் கலவரம், நமது தேசத்தின் குடிமக்கள் மத்தியில் சகோதரத்துவ உணர்வுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வகுப்புவாத கலவரங்கள் பொது சீர்கேட்டின் மிகவும் வன்முறை வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. குற்றவாளிகளின் செயல்கள் நாட்டின் சமூக கட்டமைப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது, மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியது மற்றும் சமூகத்தில் உள்ள மத நல்லிணக்கத்தை பாதிக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியது.

இதனிடையே, டெல்லி கலவர வழக்கில் மார்ச் 13 அன்று, குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசுத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், டெல்லி கலவர வழக்கில் 9 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது டெல்லி நீதிமன்றம்.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 436 (வீடு போன்றவற்றை அழிக்கும் நோக்கத்துடன் தீ அல்லது வெடிமருந்து மூலம் தீங்கு செய்தல்) தண்டனைக்குரிய குற்றத்திற்காக அனைத்து குற்றவாளிகளும் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு குற்றவாளியும் ரூ.20,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்