கவனமாக இருங்கள்..! Paytm பெயரில் உலாவரும் போலி ட்விட்டர் கணக்குகள்..!
பேடிஎம்-ன் போலியான ட்விட்டர் கணக்குகள் வாடிக்கையாளர் சேவையைத் தேடும் பயனர்களை குறிவைக்கிறது.
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளின் நீல நிறக் குறியீட்டை நீக்கியதில் இருந்து ட்விட்டர் பயனர்கள் அனைவரும் உண்மையான கணக்குகளை அடையாளம் காண்பதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மிகப்பெரிய பண பரிவர்த்தனை செய்யும் செயலியான Paytm-ன் வாடிக்கையாளர் சேவை கணக்கை போல ட்விட்டரில் போலியான வாடிக்கையாளர் சேவை கணக்குகள் உலாவி வருகின்றன. சமீபத்தில் பயனர்கள் Paytm என ட்வீட் செய்யும் பொழுது நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையைப் போல போலியான கணக்குகள், பயனர்களுக்கு வாடிக்கையாளர் சேவை எண் என ஒரு இலவச அழைப்பு எண்களை பதிலாகத் தருகின்றது.
இது குறிப்பாக, பணம் செலுத்துதல் அல்லது பிற Paytm தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவி தேவைப்படும் நபர்களைக் குறிவைக்கிறது. மேலும், இந்த கணக்குகள் ட்விட்டரில் வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கும் போது டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனத்தால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அசல் எழுத்து நடைமுறையைப் பிரதிபலிப்பதால், அவை உண்மையானவை என்று பயனர்கள் நம்பி விடுகின்றனர் .
ட்விட்டரில் Paytm-ன் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவைக் கணக்கு, ‘Paytm care’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.