மின் வாரிய ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி.! ஊதிய உயர்வை அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.!
மின் வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி 19 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தை முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் கூறுகையில், கடந்த 2019 டிசம்பர் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய புதிய சம்பள உயர்வு குறித்து சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் அனைவருக்கும் 6 சதவீத ஊதிய உயர்வும், 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு கூடுதலாக மூன்று சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பள உயர்வால் மின்வாரியத்திற்கு கூடுதலாக 527 கோடி ரூபாய் செலவாகும் என்றும், டிசம்பர் 2019 முதல் இந்த ஆண்டு வரையிலான 28 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் 500 ரூபாய் கணக்கிட்டு மாதந்தோறும் வழங்கப்படும் என்றும் இதற்காக கூடுதல் 106 கோடி செலவாகும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.
இந்த ஊதிய உயர்வு மூலம் 75 ஆயிரத்து 978 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், 62,548 மூத்த ஊழியர்கள் 10 ஆண்டு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வினால் பயன்பெறுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கான உடன்பாடு தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.