திருப்பூரில் ரூ.7.36 கோடியில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்..!
திருப்பூரில் 7.36 கோடி ரூபாய் மதிப்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் இருந்த திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், இங்கு காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு, அலுவலகம், நிர்வாக அலுவலகம் மற்றும் ஆயுதப்படை வளாகம் ஆகியவை அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் செயல்பட்டது. இதற்காக சொந்த கட்டிடம் கட்ட பல்வேறு பகுதிகளில் இடம் தேர்வு நடந்தது. இந்நிலையில், பல்லடம் ரோட்டில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமையும் பெருந்திட்ட வளாகத்தில், இடம் ஒதுக்கப்பட்டது. இதில், ரூ.60 லட்சம் மதிப்பில் காவல்கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் ரூ. 6.76 கோடி மதிப்பில் மாவட்ட காவல் துறை அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த, 2013 ஏப்ரல் மாதம், முகாம் அலுவலகத்துக்கும், நவம்பர் மாதம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் துவங்கி நடந்தன. இதற்கிடையே, அதே வளாகத்தில், ஆட்சியர் அலுவலக வளாக கட்டுமான பணியும் நடந்து வந்தது. நிர்வாகக் காரணங்களுக்காக, இப்பணி விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டுமான பணிக்கு திருப்பி விடப்பட்டனர். இதனால் காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடப் பணி சற்று மந்தமாக நடைபெற்றது.ஆனால்,ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி நிறைவடைந்ததுவிட்டது. மேலும், திறப்பு விழாவும் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுமான பணி மட்டும் மந்தமாக நடந்து வந்தது. இந்நிலையில், கட்டுமான பணிகள் ஒரு வழியாக நிறைவடைந்துள்ளன. விரைவில் இதன் திறப்புவிழா நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.