உலகக் கோப்பை கால்பந்து குரூப் ‘பி ’ பிரிவு : சிறப்பு கண்ணோட்டம்…!
சர்வதேச கால்பந்து கழக தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள போர்ச்சுக்கல் 1966ஆம் ஆண்டு 3வது இடம் பிடித்ததே உலகக் கோப்பை போட்டிகளில் அதன் சிறந்த ஆட்டமாகும். கிறிஸ்டியானோ ரொனால்டோதான் போர்ச்சுக்கல் அணியின் முகவரி. இருந்தாலும் அவரை மட்டுமே நம்பி அணி இல்லை என்பதற்கு கடந்த யூரோ கோப்பை இறுதிப் போட்டியே உதாரணமாகும்.அந்தப் போட்டியில் ரொனால்டோ காயம்பட்டு விளையாடமல் இருந்தபோதும் போர்ச்சுக்கல் பிரான்சு அணியுடன் போராடி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
நடுகளத்தில் ஜோவோ மௌரீனியோ, எதிர்ப்பு ஆட்டத்தில் பெபே ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். முன்வரிசையில் ஆந்த்ரே சில்வா ரொனால்டோவிற்கு உறுதுணையாக இருப்பார். உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர் அணியில் இருந்தபோதிலும் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்ட்ரோஸ் அணியின் எதிர்ப்பு ஆட்டத்தையே முழுமையாக நம்பியுள்ளார்.
போட்டிகள்:
ஜூன் 15 – ஸ்பெயின்
ஜூன் 20 – மொராக்கோ
ஜூன் 25 – ஈரான்
ஸ்பெயின்:
2010 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற அணி. யூரோ கோப்பை, உலகக் கோப்பை என தொடர்ந்து வென்ற அணி என்ற அந்த ஆட்டத்திறன் இல்லையென்றபோதிலும் சிறந்த வீரர்களைக் கொண்ட அணி. உலகத் தரவரிசையில் 8வது இடத்தில் உள்ளது. பிக்வே, புஸ்கட்டஸ், ரமோஸ் ஆகியோரைக் கொண்ட எதிரப்பு ஆட்டம் எந்தவொரு அணியையும் அச்சுறுத்துவதாகும்.நடுகளத்தில் அனுபவம் வாய்ந்த ஆந்த்ரே இனியெஸ்டா எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொறுத்து ஆட்டத்தின் போக்கு மாறக்கூடும். ஜூலென் லோப்டெஜ்]யி பயிற்சியாளாராகப் பொறுப்பேற்ற பிறகு ஒரு தோல்வியைக்கூட அறியாமல் ஸ்பெயின் அணி உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள்:
ஜூன் 15 -போர்ச்சுக்கல்
ஜூன் 20 – ஈரான்
ஜூன் 25 – மொராக்கோ
மொராக்கோ:
1986ஆம் ஆண்டு இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியதே உலகக் கோப்பை போட்டிகளில் மொரக்கோ அணியின் சிறந்த ஆட்டமாகும். அணியின் வீரர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய லீக் ஆட்டங்களின் இரண்டாம்வரிசை ஆட்டக்காரர்களாவார்கள்.பயிற்சியாளர் ஹெர்வே ரெனால்டு சாம்பியா மற்றும் ஐவரிகோஸ்ட் அணிகளுக்கு ஆப்பிரிக்க தேசியக் கோப்பையைப் பெற்றுத்தந்தவராவார். சிறந்த எதிர்ப்பு ஆட்டம், கடும் தாக்குதல் ஆட்டம் என்பதே அணியின் சிறப்பு. உலகத்தரவரிசைப் பட்டியலில் 42வது இடம்.
போட்டிகள்:
ஜூன் 15 – ஈரான்
ஜூன் 20 – போர்ச்சுக்கல்
ஜூன் 25 – ஸ்பெயின்
ஈரான்:
உலகக் கோப்பையில் இதுவரை முதல் சுற்றைத் தாண்டியதில்லை. ஆசியாவிலிருந்து உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமை உண்டு. தகுதிச்சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தானை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.இரண்டு சுற்றுப் போட்டிகளிலும் மொத்தம் 18 ஆட்டங்களில் தோல்வி காணதா ஈரான் 9 ஆட்டங்களில் கோல் எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 5வது முறையாக உலகக் கோப்பைப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ள ஈரான், தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. உலகத்தர வரிசையில் 36வது இடம். பயிற்சியாளர் கார்லோஸ் குவோய்ரோஸ்.
போட்டிகள்: ஜூன் 15 – மொராக்கோ
ஜூன் 20 – ஸ்பெயின்
ஜூன் 25 – போர்ச்சுக்கல்