அதிமுக ஆட்சி ஊழல் குறித்து அடுத்தகட்ட விசாரணை – முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுகவின் ஊழல் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும் என உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு.
உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார். அதிமுகவின் ஊழல் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும், கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை எனவும் கூறினார்.
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக, சென்னையில் கடந்த 24ம் தேதி TANGEDCO அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது. இதில், டிஜிட்டல் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்த நிலையில், அதிமுக ஆட்சி ஊழல் குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என முதல்வர் தெரிவித்தார்.
இதனிடையே, பேசிய முதல்வர், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திப்படுத்தும் என பா.ஜ.க.வினர் கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வாக்களிக்காத பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் தான். அவர்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புகிற மக்கள். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் மக்களை நம்புகிறோம், இந்திய மக்களுடைய மனசாட்சி என்றைக்கும் உறங்கிவிடாது என நம்புகிறோம் எனவும் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் கூறினார்.