அதிமுகவின் போலி பொதுக்குழு கலைப்பு – ஓபிஎஸ் அதிரடி அறிக்கை

O Panneerselvam

உண்மையான கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என ஓபிஎஸ்  அறிக்கை. 

அதிமுக அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, பொதுக் குழு இன்று முதல் கலைக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், கழகப் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும், கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும்; கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான் என்ற விதியை மாற்றியும்; அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளராக வர முடியும் என்கின்ற அடிப்படை விதியை மாற்றி 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், ஐந்து ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்தும், இவ்வாறு, கழக சட்டதிட்டவிதிகளின் அடிப்படைக்கு நேர் விரோதமாக செயல்பட்டும் வந்த, நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய போலி பொதுக் குழு அறவே கலைக்கப்பட வேண்டும் என்றும், கழக உறுப்பினர்கள் மூலம் உண்மையான தேர்ந்தெடுக்கப் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு அமைக்கக்கப்பட வேண்டுமென்றும் 24-04-2023 அன்று திருச்சியில் நடைபெற்ற கழக அடிப்படை உறுப்பினர்களின் மாநாடு கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்குப் பரிந்துரை செய்தது.

அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், நியமனம் செய்யப்பட்ட போலிப் பொதுக் குழு இன்று முதல் (01-05-2023) கலைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உறுப்பினர்கள் யாரும் அந்த போலி பொதுக் குழு உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

புதிய பொதுக் குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில், உண்மையான கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்பதையும், அதன்பிறகு முறையான, நேர்மையான தேர்தல்கள்மூலம் பொதுக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்