உலகம் முழுவதும் 1800 திரைகளில் வெளியான காலா – ரசிகர்கள் உற்சாகம்..!
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. உலகம் முழுவதும் ‘காலா’ படம் 1800 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ரஜினி தூத்துக்குடி சென்று வந்த பிறகு ரஜினிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வெளியாகிய நிலையிலும், ‘காலா’ படத்திற்கு உற்சாகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.
இன்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் நடைபெற்றன. முதல் காட்சியிலேயே ‘காலா’ படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் வழக்கம்போல் குவிந்தனர். கொடி, தோரணம், ‘கட்-அவுட்’, பேனர்கள் தியேட்டர்களில் இடம் பிடித்தன.
ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர். படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
ரஜினி அரசியலுக்கு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்த படம் அதிகமாக அரசியல் பேசும் படமாக உருவாகவில்லை. மும்பை தாராவி பகுதியில் வாழும் ஏழைகளுக்கு குரல் கொடுப்பவராக ரஜினி இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
ரஜினியின் மற்ற படங்களை போல இந்த படத்திலும் அவர் ஸ்டைலாக நடித்திருக்கிறார். இது ரஜினியை பா.ரஞ்சித் இயக்கிய 2-வது படம். ரஜினியை மனதில் வைத்தே கதையை அவர் அமைத்து இருக்கிறார்.
‘காலா’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரஜினி குரல் கொடுக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும், பா.ரஞ்சித் முத்திரை அதிகம் உள்ளது. அனைவரும் விரும்பும் விதத்தில் கதை இருக்கிறது.
இந்த படத்துக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ரஜினிக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமையும். ஆரம்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் சில நாட்களில் ‘காலா’ படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என்று இந்த படத்தின் கலைஞர்களும், ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.
ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.