ஸ்டெர்லைட் போராட்டத்தில் மரணமடைந்த 13பேரின் குடும்பத்திற்கு ரூ.20லட்சம் நிவாரணம் வழங்கல் : ஆட்சியர் தகவல்..!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் இறுதி விசாரணை : ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு.
13 பேரை பலி கொண்ட தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக இன்று இறுதி விசாரணை மேற்கொண்டுள்ள தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் கூடுதல் ஆணையர் புபுல்தத்தா பிரசாத் தலைமையிலான குழு துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடியில் கடந்த 2ம் தேதி விசாரணையை தொடங்கியது. போலீஸ் சூப்பிரண்டு புபுல்தத்தா பிரசாத் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பீர்சிங், இன்ஸ்பெக்டர்கள் லால்பகர், நிதின்குமார், அருள்தியாகி ஆகிய 5 பேர் அடங்கியக்குழு தூத்துக்குடியில் முகாமிட்டனர். விசாரணை தொடங்கியதும் முதலில் அவர்கள் துப்பாக்கி சூடு மற்றும் மோதல் நடந்த இடங்களை பார்வையிட்டனர்.
மேலும் கலெக்டர்9 உள்ளிட்ட அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினர்.மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்ட இந்த குழுவினர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 6 நாட்களாக விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் இன்று இறுதி விசாரணையை முடித்து கொண்டு டெல்லி செல்ல உள்ளனர். அடுத்த ஓரிரு நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பத்தில் உயிரிழந்த அந்தோணி செல்வராஜ் உடல் அவரது உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. ஏற்கனவே 12 பேரின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் முடிவடைந்தன.
மேலும், கிருஷ்ணராஜபுரத்தை சார்ந்த அந்தோணி செல்வராஜ் (46) த/பெ.ஜோசப் ஸ்டாலின், என்பவரின் உடல், உடற் கூராய்வு செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, மரணமடைந்த 13 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 இலட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்