#IPL BREAKING: குஜராத் பந்துவீச்சில் மிரண்டது மும்பை..! 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
ஐபிஎல் தொடரில் இன்றைய MI vs GT போட்டியில், குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, குஜராத் அணியில் முதலில் விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய அபினவ் மனோகர் மற்றும் டேவிட் மில்லர் அணிக்கு ரன்களை குவித்தனர். முடிவில், குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து, 208 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் மும்பை அணியில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்க, 2 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, கேமரூன் கிரீன் களமிறங்கி பொறுப்பாக விளையாடிய நிலையில் 33 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு, சூர்யகுமார் யாதவ் 23 ரன்களுக்கு அவுட் ஆகி களத்தை விட்டு வெளியேறினார்.
இறுதியில் நேஹால் வதேரா மற்றும் பியூஷ் சாவ்லா களத்தில் இருக்க, வதேரா மட்டும் அதிரடியாக விளையாடி பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டார். அவர், 21 பந்துகளில் 40 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதன்மூலம், குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக நேஹால் வதேரா 40 ரன்களும், கேமரூன் கிரீன் 33 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 23 ரன்களும் குவித்துள்ளனர். குஜராத் அணியில் நூர் அகமது 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.