பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம்!இந்த முறையாவது அதிமுகவிற்கு வாய்ப்பு கிடைக்குமா?
நான்காவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில், அதிக எம்.பி.க்களைக் கொண்டுள்ள பெரிய கட்சியாக விளங்கும் அதிமுக இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களைவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. அதற்கான பணிகளை பாஜக.வினர் தொடங்கிவிட்டனர். அண்மையில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக.வுக்கு அதிக தொகுதிகள் கிடைத்தும் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்தத் தேர்தல் தோல்விக்கு பின்னர், அதன் கூட்டணிக் கட்சிகளே பாஜக மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.
இதனைச் சரிசெய்வதுடன், வரும் மக்களவைத் தேர்தலில் அதிக கவனம் செலுத்தவும் பாஜக முடிவு செய்துள்ளது. அந்த வகையில், விரைவில் 4-வது முறையாக நடைபெற உள்ள அமைச்சரவை விரிவாக்கத்தை பயன்படுத்த பாஜக தீர்மானித்துள்ளது. எனவே, இந்த விரிவாக்கத்தில் தமது கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்காக, தங்கள் கூட்டணிக் கட்சிகளிடம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தற்போதே பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டார். மேலும், பாஜகடன் புதிய கட்சிகளும் கூட்டணி சேர விரும்பினால், அவர்களுக்கும் புதிய அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, கடந்த முறை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கும் இடம் கிடைக்கும் என பேச்சுகள் எழுந்தன. அதே கருத்துகள் தற்போதும் எழுந்துள்ளன. இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் நிச்சயம் பலன் இருக்காது. புதிய கட்சி தொடங்கும் ரஜினிகாந்த், எங்களுடன் கூட்டணி அமைக்காமல் போனால், அதற்கு மாற்று ஏற்பாடுகளும் செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த சூழ்நிலைக்கு பொருத்தமாக இருக் கும் ஒரே கட்சி அதிமுகதான். எனவே, அக்கட்சியினருக்கு அமைச்சரவையில் பதவி கொடுத்து, கூட்டணிக்கு அச்சாரமிடும் திட்டம் உள்ளது.இவ்வாறு பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.