மக்களே வார்த்தைகளை நம்பி வாக்களிக்காமல், மனசாட்சிப்படி வாக்களியுங்கள்; பிரியங்கா காந்தி பேச்சு.!!
மக்கள் வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் வாக்களிக்கக்கூடாது, மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என கர்நாடகாவில் பிரியங்கா காந்தி, கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி, நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை மே 13இல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பலத்த போட்டி நிலவி வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தொடங்கப்படவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பிரச்சாரம் தீவிரம்:
ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரசும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இன்று மற்றும் நாளை கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பிரியங்கா காந்தி பேச்சு:
மைசூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் உடைக்காத இந்திரா காந்தியை உங்கள் அனைவருக்கும் தெரியும், இன்று நீங்கள் என்னை நம்புகிறீர்கள் என்றால் அதற்கு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் உங்களுக்காக உழைத்த மற்ற காங்கிரஸ் தலைவர்கள் தான் காரணம்.
தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, பாஜக தலைவர்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார், கர்நாடக மக்கள் அவர்களின் வெறும் வார்த்தைகளை நம்பாமல், வாக்கு சேகரிக்கும் தலைவர்களின் மனசாட்சியை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கர்நாடக மக்கள் எந்தவொரு தலைவரின் வார்த்தைகளை நம்பாமல், தங்கள் மனசாட்சியின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.