மதுவின்றி விளையாட்டு போட்டிகளை நடத்த முடியாதா.? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.!
பன்னாட்டு மாநாடு , விளையாட்டு போட்டிகளில் மது பரிமாற அனுமதி அளிக்கும் தமிழக அரசின் அரசாணை குறித்து பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசனது நேற்று உள்ளரங்கிற்குள் நடைபெறும் பன்னாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பயன்படுத்த அனுமதி வழங்கியது . திருமண நிகழ்வுகள் மற்றும் பிற கொண்டாட்டங்களின் போது மதுபானம் வழங்கப்படுவதற்கு தடை செய்து திருத்தி மீண்டும் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான மாநாடு மற்றும் விளையாட்டு போட்டிகளில் மட்டும் மதுபானம் வழங்க அரசு அனுமதி அளித்தது.
இந்த மதுபான அனுமதி குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பன்னாட்டு / தேசிய மாநாடுகளாக இருந்தாலும், விளையாட்டு நிகழ்வுகளாக இருந்தாலும் அவற்றின் வெற்றி, எடுத்துக் கொள்ளப்பட்ட கருப்பொருளில்தான் உள்ளதே தவிர மது பரிமாறுவதில் அல்ல. பன்னாட்டு / தேசிய நிகழ்வுகளில் மது பரிமாற அனுமதி அளிக்க வேண்டும் என்ற சிந்தனை தமிழக அரசுக்கு எவ்வாறு ஏற்பட்டது? மது வழங்குவது என்ன தமிழ்ப் பண்பாடா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் ,அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் இதுவரை இருமுறை உலக முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. அவை தவிர ஏராளமான பன்னாட்டு/தேசிய மாநாடுகள், கலந்துரையாடல்கள் அரசின் சார்பில் நடத்தப்பட்டுள்ளன. இப்போதும் கூட ஜி 20 அமைப்புகள் தொடர்பான மாநாடுகள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவை எதிலும் இதுவரை மது இருப்பு வைக்கப்படவோ, பரிமாறப்படவோ இல்லை.
கொரோனா ஊரடங்கு காலத்தை தவிர எல்லா ஆண்டுகளிலும் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. உலக சதுரங்க போட்டிகள் அண்மையில் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டன. இன்னும் ஏராளமான பன்னாட்டு/தேசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளன. அவை எதிலும் மது இருப்பு வைக்கவோ, பரிமாறவோ அனுமதிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இனிவரும் காலங்களில் மது வகைகளை பரிமாறுவதற்கு தமிழக அரசு ஏன் ஆர்வம் காட்டுகிறது என தெரியவில்லை என தெரிவித்தார்.
பன்னாட்டு/தேசிய மாநாடுகளிலும், விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்கும் வெளிநாட்டவர்கள், மது அருந்தும் வழக்கம் கொண்டவர்கள் என்பதற்காக இங்கு மது பரிமாற அனுமதிக்க தேவையில்லை என்றும், அது நமது பண்பாடும் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்எனவும் அறிக்கையில் அன்புமணி வலியுறுத்தினார்.
மது இல்லாத தமிழகம் அமைக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பம். அதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். அதன் முதல்கட்டமாக பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான மாநாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது வகைகளை இருப்பு வைக்கவும், பரிமாறவும் அனுமதிக்கும் அரசாணைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற மதுவிலக்குத் துறை அமைச்சரின் அறிவிப்பை நடப்பு ஏப்ரல் மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும் எனவும், மீதமுள்ள 4,829 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட்டு, அதை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தனது அறிக்கையில் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார்.