சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம்..! அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு..!

Default Image

சூடான் ராணுவத்தினர் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்தார்.

சூடான் ராணுவ மோதல்: 

சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலமும் பயங்கரமாக தாக்குதல் நடந்து வருவதால் சூடான் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மீட்பு நடவடிக்கை:

இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சூடானில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் அங்கு சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், தற்பொழுது சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையான ஆபரேஷன் காவேரியை இந்தியா தொடங்கியுள்ளது.

போர் நிறுத்தம்:

இந்நிலையில், சூடானில் போரிடும் ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினர் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்தார். அவர் கூறுகையில், கடந்த 48 மணிநேர தீவிர பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சூடான ஆயுதப் படைகள் (SAF) மற்றும் விரைவான ஆதரவுப் படைகள் (RSF) ஏப்ரல் 24 நள்ளிரவில் தொடங்கி 72 மணி நேர நாடு தழுவிய போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவும் நிலைநிறுத்தவும் ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.

மூன்றாவது போர்நிறுத்தம்:

கடந்த 2 வாரங்களாக சூடான் ஆயுதப் படைகளுக்கும் விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த மோதலில் அறிவிக்கப்படும் மூன்றாவது போர்நிறுத்தம் இதுவாகும். இதுவரை அறிவிக்கப்பட்ட இரண்டு போர்நிறுத்தங்கள் எதுவும் முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக, போர் நிறுத்தம் கோரி வேண்டுகோள் வைத்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா, அமெரிக்கா, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்கும் முயற்சியை தொடங்கியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்