கர்நாடக தேர்தல் – ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் வேட்புமனு வாபஸ்!
கர்நாடகாவில் ஓபிஎஸ் அணியின் 2 வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ஆம் தேதி 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. இந்த சமயத்தில், அதிமுகவும் அங்கும் களம் காண திட்டமிட்டது. ஏற்கனவே கர்நாடகாவில் தமிழர்கள் அதிகமுள்ள இடங்களில் அதிமுக பல முறை போட்டியிட்டு வென்றுள்ளது.
இதன் காரணத்தால் இந்த முறையும் போட்டியிட வேலைகளை ஆரம்பித்து. அதன்படி, ஓபிஎஸ் தரப்பில் மூன்று தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தார். இபிஎஸ் தரப்பில் ஒரு தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்திருந்தார். இதில், புலிகேசி தொகுதியில் இபிஎஸ் ஆதரவாளர் அன்பரசன் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து இரட்டை இலை சின்னமும் அவர்கள் வசமானது. இதனால் ஓபிஎஸ் தரப்பு பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த சமயத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் பெயர் பாதிக்கப்பட கூடாது என்பதால் தங்கள் தரப்பு வேட்பாளர்களான குமார் மற்றும் ஆனந்த்ராஜ் ஆகியோர் வாபஸ் பெற உள்ளனர் எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர்கள். அதன்படி, கோலார் தங்கவயலில் ஆனந்தராஜ், காந்தி நகரில் குமார் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.