இயக்குனர் லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.!
காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைப்பட தயரிப்பு நிறுவனமான பிவிபி, காசோலை மோசடி வழக்கில் பிரபல தமிழ் இயக்குனர் லிங்குசாமி மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிறை தண்டனை நிறுத்தி வைப்பு:
இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, பிவிபி நிறுவனத்தால் தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய கோரியும், தடை விதிக்க கோரியும் திருப்பதி பிரதர்ஸ் மேல்முறையீடு செய்திருந்தனர். இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 20% தொகையை 6 வாரங்களில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தீர்ப்பு அளித்துள்ளனர்.
இயக்குநர் லிங்குசாமியின் செக் மோசடி:
கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்த நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம், பிவிபி கேபிடல் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து “எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக ரூ.1.03 கோடி கடன் வாங்கியது. அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மீதும் பிவிபி கேபிடல் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.