மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை..! ரூ.36.9 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.36.9 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருள் கடத்துதல் என்பது நடைபெற்று வருகிறது. அதனைத் தடுக்கும் முயற்சியில் போலீசார், போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் தற்பொழுது மும்பை கண்டிவாலியில் உள்ள சார்கோப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (ANC) சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 29 வயதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், “போதைப்பொருள் கடத்தல்காரர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாவும், விசாரணையில், இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து போதைப் பொருள்களை வரவழைத்ததாக போதைப் பொருள் கடத்தல்காரர் கூறியதாகவும்” போலீசார் தெரிவித்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.