திமுகவினருக்கு சொந்தமானது அல்ல – அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு G Square நிறுவனம் விளக்கம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்த குற்றசாட்டுகள் தவறானவை என G Square நிறுவனம் விளக்கம்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
திமுகவினர் வீட்டில் சோதனை:
50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்தி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
G Square நிறுவனம் விளக்கம்:
கர்நாடகாவில் பெங்களூரு,மைசூர் ஆகிய நகரங்களிலும், தெலுங்கானாவில் ஐதராபாத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், G Square நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ, அவர்கள் கட்டுபாட்டிலோ இல்லை, எங்கள் நிறுவனம் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்த குற்றசாட்டுகள் தவறானவை என G Square நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
தவறான குற்றச்சாட்டு:
இதுதொடர்பாக G Square நிறுவனம் கூறுகையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயலால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. எங்களுடைய சொத்து மதிப்பு என அண்ணாமலை குறிப்பிட்டுள்ள தொகை தவறானது என விளக்கமளித்துள்ளது.