‘குடி’மகன்களுக்கு குட் நியூஸ்.! அரசு அனுமதியுடன் திருமண மண்டபங்களில் ஒருநாள் மதுபான கூடம்.!
அரசு அனுமதி பெற்று திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் ஒருநாள் மதுபான கூடம் அமைத்து மது அருந்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மதுபான நிறுவனமான டாஸ்மாக் மதுபானங்களை டாஸ்மாக் அனுமதி பெற்ற பார் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் போன்ற பொது இடத்தில் வைத்து அருந்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த நடைமுறையில் திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, இனி ஒருநாள் உரிமம் வாங்கி, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மதுபான கூடங்கள் அமைத்து மது அருந்த அனுமதிக்கலாம் என தமிழக கலால் துறை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒரு நாள் உரிமத்தை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றுக்கொள்ளலாம் எனவும்,தேவை இருப்பின் காவல்துறை அனுமதியும் பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் உரிமத்துககான கட்டணமானது, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என பகுதிகளுக்கு ஏற்ப தனித்தனி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக திருமண நிகழ்வுகள், மற்ற நிகழ்ச்சிகளில் அரசு அனுமதியின்றி மதுபான விருந்து நடைபெறுகிறது. இதனை ஒழுங்குபடுத்தவே இந்த திட்டம் என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.