முதல் முறையாக தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி..!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முதல் தொடரில் இந்தியா – இலங்கை அணிகள் கலந்துகொண்டன. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
அதன்பின் 2005-06 தொடரில் பாகிஸ்தானும் கலந்துகொண்டது. இந்த முறையும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இந்திய அணி கோப்பை கைப்பற்றியது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற தொடரிலும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
2008-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேசம் அணியும் கலந்துகொண்டது. இந்த முறையும் வழக்கம்போல இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியது. 2012-ம் ஆண்டு முதல் இந்த தொடர் டி20 முறைக்கு மாற்றப்பட்டது. இந்த தொடரில் சீனா, தாய்லாந்து, ஹாங்காங், நேபாளம் ஆகிய அணிகளும் கலந்துகொண்டன. இந்த முறையும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சீனா, ஹாங்காங் பங்கேற்கவில்லை. இந்த தொடரில் வெற்றிபெற்றதன் மூலம் தொடர்ந்து ஆறாவது முறையாக இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் ஆறு தொடர்களில் விளையாடிய 32 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியடையாமல் இருந்தது.
இந்நிலையில், 7-வது மகளிர் ஆகிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியிடம் தோல்வியடைந்தது.
இதன்மூலம், இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு வங்காளதேச அணி முற்றுப்புள்ளி வைத்தது. இதுவரை விளையாடிய 34 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடையாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.