தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரின் உடல்களை உடற்கூறாய்வு முடிந்தது. இதில், 4பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது இதில் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாயினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி துப்பாக்கிச் சூடு குறித்து சந்தேகம் நிலவுவதால் 13 பேரில் 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்றும் மீதமுள்ள 7 பேரின் உடல்களுக்கு மறு உடற்கூறாய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
உடற்கூறாய்வுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான மணிராஜ், அந்தோணி செல்வராஜ், கிளாட்சன், ஜெயராமன், ரஞ்சித்குமார், ஜான்சி ஆகிய 6 பேரின் உடல்களை இன்று உடற்கூறாய்வு செய்யும் பணி இன்று காலை துவங்கியது. உடற்கூறாய்வு பணிகள் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இதையடுத்து உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில், உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன், அன்னை வேளாங்கன்னி நகரைச் சேர்ந்த அந்தோணி செல்வராஜ் ஆகிய இருவரின் உடல்களை நாளை பெற்றுக் கொள்வதாக உறவினர்கள் தெரிவித்துள்ளதால், அவர்கள் இருவரின் உடல் அரசு மருததுவமனையில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்கள் அடக்கம் செய்ப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை வளாகம் உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.